''அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்,'' என, மாணவர்களுக்கு, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தாண்டு பட்டப் படித்து முடித்த மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவை, கொரோனா பிரச்னையால், கூகுளின், 'யூ டியூப்' நிறுவனம் நடத்தியது. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பாகிஸ்தானைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், பாடகி லேடி காகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், சுந்தர் பிச்சை பேசியதாவது:மாணவர்களே, இது போன்ற விழாவை,நீங்கள் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். கல்லுாரியில் பெற்ற அறிவை கொண்டாடும் இத்தருணத்தில், உங்கள் திட்டம், வேலைவாய்ப்பு, எதிர்கால அனுபவம் போன்றவற்றை இழந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம்.
தற்போதைய இருண்ட சூழலில், நம்பிக்கை ஏற்படுவதும் கடினமாக இருக்கும்.
ஆனால், வெளிப்படையாக செயல்படுங்கள்; நம்பிக்கையுடன் காத்திருங்கள்; பொறுமையாக இருங்கள்.
அவ்வாறு இருந்தால், வரலாறு, நீங்கள் இழந்ததை நினைவில் கொள்ளாது. மாறாக, நீங்கள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்திருக்கும்.
அனைத்தையும் மாற்றக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு வாய்த்துள்ளது.
கடந்த, 1920ல், உலகையே 'புளு' காய்ச்சல் புரட்டிப் போட்டது. 1970களின் மத்தியில் வியட்னாம் போர் நடந்தது. 2001ல், அமெரிக்க வர்த்தக கட்டடம் தகர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளை ஒட்டிய காலத்தில், ஏராளமான மாணவர்கள் பட்டப் படிப்பு முடித்து, கல்லுாரியை விட்டு வெளியே வந்துள்ளனர்.
அவர்கள், ஒவ்வொரு சவாலையும் சமாளித்து முன்னேறியுள்ளனர். வரலாறு, நமக்கு அதைத் தான் கற்றுத் தந்துள்ளது. நான் ஸ்டான்போர்டு செல்வதற்கு, விமான டிக்கெட் எடுப்பதற்காக, என் தந்தை ஓராண்டு சம்பாத்தியத்தை அளித்தார். அது தான், என் முதல் விமானப் பயணமும் கூட. இத்துறையில் இந்நிலைக்கு நான் வருவதற்கு காரணம், அதிருஷ்டம் மட்டுமல்ல; தொழில்நுட்பத்தில் எனக்கு இருந்த ஆர்வமும், எதையும் ஏற்கும் திறந்த மனநிலையும், முக்கிய பங்கு வகித்தது.நான் படித்த காலத்தில், எனக்கு கிடைக்காத தொழில்நுட்ப வசதிகள், இன்றைய மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆகவே, ஒவ்வொரு தலைமுறையும், அடுத்த தலைமுறை முன்னேறுவதற்கான அடித்தளத்தை அமைத்து தருகிறது. அதை புரிந்து கொண்டு, ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் இருங்கள்; எந்த காலத்திலும் பொறுமையை இழக்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Comments
Post a Comment